ராணா டகுபதி இல்லை...பாகுபலி படத்தில் நடிக்க இருந்தது இந்த ஹாலிவுட் நடிகரா?
|பாகுபலி படத்தில் பல்வால் தேவனாக நடிக்க தான் முதல் தேர்வு இல்லை என்று ராணா டகுபதி கூறினார்.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவர் தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா, காடன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் ராஜமவுலி இயக்கத்தில் 'பாகுபலி' படத்தில் வில்லனாக நடித்து திரையுலகில் பிரபலமானார்.
இந்நிலையில், நடிகர் ராணா டகுபதி, பாகுபலி படத்தில் பல்வால் தேவனாக நடிக்க முதல் தேர்வு தான் இல்லை என்று கூறியுள்ளார், இது குறித்து அவர் கூறுகையில்,
'தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா என்னிடம் வந்து, இது ஒரு போர் சார்ந்த படம் என்றும், வில்லனாக நடிக்கிறீர்களா? என்றும் என்னை கேட்டார். அதற்கு நான், இங்கு வருவதற்கு முன் எந்த நடிகரிடம் இந்த பாத்திரத்தில் நடிக்க பேசினீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், கேம் ஆப் திரோன்ஸ், அக்வா மேன் படத்தில் நடித்த ஜேசன் மோமோவாவை நடிக்க வைக்க முயற்சித்தோம் என்றார். உடனே நான் நல்ல 2-வது தேர்வு என்று கூறினேன், என்றார்.
இந்த எதிர்பாராத தேர்வு 'பாகுபலி' மீது ராஜமவுலி கொண்டிருந்த உலகளாவிய பார்வையை காட்டுகிறது. பாகுபலி திரைப்படம் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.