காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்
|நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் பிரபல யோகா பயிற்சியாளர் லோவெல் தவான் இருவருக்கும் ரிஷிகேஷில் இன்று திருமணம் நடைபெற்றது.
உத்தரகாண்ட்,
நடிகை ரம்யா பாண்டியன் 'ஜோக்கர்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் தேசிய விருது வென்றதோடு, அதில் நடித்த ரம்யா பாண்டியனின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. 'டம்மி பட்டாசு', சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை', மம்முட்டியுடன் மாலைநேரத்து மயக்கம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து மொட்டை மாடியில் இவர் எடுத்த கவர்ச்சிப்படங்கள் இவரை பிரபலமாக்கியது. அதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 1, பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிகள் மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. சூர்யா தயாரித்த 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்கிற படத்தில் கிராமத்து நாயகியாக நடித்து அசத்தி இருந்தார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன், இன்ஸ்டாவிலும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு ரவி ஷங்கர் ஆசிரமத்தில் யோகா பயிற்சி மையத்தில் ரம்யா பாண்டியன் சேர்ந்தார். இந்த ஆசிரமத்தில் அவரது பயிற்சியாளராக வந்தவர்தான் லொவல் தவான். இருவருக்கும் பார்த்த உடனே காதலில் விழுந்ததாகவும் தங்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன், லொவல் தவான் இருவருக்கும் இன்று காலை ரிஷிகேஷில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யாவிற்கு வாழ்த்துகளை கூறிவருகின்றனர். இவர்களின் திருமண வரவேற்பு வரும்15ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.