அவதூறு பதிவு: இயக்குநர் ராம்கோபால் வர்மாவை தேடும் ஆந்திர போலீஸ்
|ஆந்திர முதல்வருக்கு எதிராக அவதூறான பதிவுகள் தொடர்பான வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மாவை ஆந்திரப் பிரதேச போலீஸார் தேடி வருகின்றனர்.
ஐதராபாத்,
சர்ச்சைக்கு மிகவும் பெயர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. நாகார்ஜுனாவை வைத்து தெலுங்கில் 1989ம் ஆண்டு இவர் இயக்கிய சிவா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தெலுங்கில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று சிவா படத்தை ரீமேக் செய்திருந்தார்.அதன் பின்னர், ரங்கீலா, சத்யா, ஜங்கிள், கம்பெனி, பூத் என ஏகப்பட்ட ஹிட் படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா சூர்யா நடித்த ரத்த சரித்திரம் 2ம் பாகத்தையும் இயக்கி உள்ளார்.அமிதாப் பச்சனை வைத்து சர்க்கார் படத்தை இயக்கி உள்ளார். 2018ல் காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் எனும் ஆபாச படத்தை இயக்கி ஒட்டுமொத்த சினிமா துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின்னர், தொடர்ந்து அதே போன்ற படங்களையே இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. கிளைமேக்ஸ், நேக்கட், டேஞ்சரஸ் என பல படங்களை இயக்கி ஆர்ஜிவி வேர்ல்ட் என்பதையே புதிதாக உருவாக்கியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறை வளாகத்தின் முன்பு நின்று இயக்குனர் ராம் கோபால் வர்மா செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டார். கடந்த தேர்தலுக்கு முன்பு ததாகா படத்தின் புரோமோஷன் வெளியிடப்பட்டது. அப்போது சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர் மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரை இழிவுபடுத்தும் விதத்தில் அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.
இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் காவல் துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய ராம் கோபால் வர்மாவின் மனுவை ஆந்திர உயர் நீதிமன்றம் நவம்பர் 18ம் தேதி நிராகரித்து, ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு கூறியது. ஜாமீன் மனு நிலுவையில் உள்ள நிலையில், நவம்பர் 24ம் தேதிக்கு முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு வர்மாவுக்கு போலீஸார் இரண்டாவது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ராம் கோபால் விசாரணைக்கு ஆஜராகாததால் வர்மாவின் ஐதராபாத் இல்லத்துக்கு போலீசார் சென்றனர். கோபால் வர்மாவை நேரில் ஆஜராக காவல் துறை சம்மன் அனுப்பிய நிலையில், 'டிஜிட்டல் முறையில் அவர் ஆஜராக அனுமதிக்க வேண்டும்' என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தனக்கு படப்பிடிப்புகள் இருப்பதால் கால நீட்டிப்பு கோரியிருந்தார். இதையடுத்து, இன்று நேரில் ஆஜராக வேண்டும் என காவல் துறை தெரிவித்தது. இதனால் அவரது வீட்டுக்கு முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை. இயக்குநர் ராம் கோபால் வர்மாவை ஆந்திரப் பிரதேச போலீஸார் தேடி வருகின்றனர்.