ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது நடிகை ரகுல் பிரீத் சிங் காயம்
|ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தவறால் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது.
தென் இந்திய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2, அயலான் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் தேவ்கன் மற்றும் ஆர். மாதவனுடன் 'தே தே பியார் தே 2' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் "இந்தியன் 3" படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங், ஜிம்மில் 80 கிலோ எடையை தூக்கும் போது காயம் அடைந்துள்ளார். வழக்கமாக குனிந்து அதிகமான எடையைத் தூக்கும்போது இடுப்பு பெல்ட் அணிவது வழக்கம். ஆனால், ரகுல் பிரீத் சிங், பெல்ட் அணியாமல் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த எடையைத் தூக்கியுள்ளார். இதனால் அவர் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பேசிய அவர், "நான் செய்த முட்டாள் தனமான தவறு இது, உடற்பயிற்சியில் என்னை நானே இன்னும் முன்னேற்றிக்கொள்ள செய்த செயல் இன்று எனக்கு பயங்கரமான பின்விளைவை ஏற்படுத்தியுள்ளது . கடந்த 6 நாட்களாக நான் படுக்கையில் தான் இருக்கிறேன், முழுவதுமாக நான் குணமடைய ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் ஆகும், ஆனால் அதிவிரைவில் நான் குணமடைய வேண்டும் ஒரே இடத்தில் தன்னம்பிக்கை இழந்து ஓய்வெடுப்பது எனக்கு எளிதான விஷயம் அல்ல. ஆனால் இதன் மூலம் எனது வாழ்க்கையில் முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக்கொண்டேன்' என்று கூறினார்.
நடிகர் ஜாக்கி பாக்னானியை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோ புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.