< Back
சினிமா செய்திகள்
ரஜினியின் பிறந்த நாளன்று  ரீ-ரிலீசாகும் தளபதி திரைப்படம்
சினிமா செய்திகள்

ரஜினியின் பிறந்த நாளன்று ரீ-ரிலீசாகும் 'தளபதி' திரைப்படம்

தினத்தந்தி
|
16 Nov 2024 9:46 PM IST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'தளபதி' திரைப்படம் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது ரஜினியின் படங்கள் வெளியாகி தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வரை வசூலித்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'கூலி' என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12ம் தேதி வருகிறது. அப்போது அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், அவர் நடித்த 'தளபதி' திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 1991ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, சோபனா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் தளபதி. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.


மேலும், இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் இன்று வரையிலும் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளவை. படம் வெளியாகி 33 ஆண்டுகளைக் கடந்துள்ளது. தற்போது ரஜினி பிறந்தநாளுக்கு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்எஸ்ஐ புரொடக்சன்ஸ் நிறுவனம் தளபதி படத்தை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ரீ-ரிலீஸ் செய்கிறது. அதுமட்டுமின்றி, ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று அவர் நடிப்பில் அடுத்து வரவுள்ள 'ஜெயிலர் 2' படத்தின் அறிவிப்பும் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் தற்போது நடித்து வரும் 'கூலி' படத்தில் சிறப்பு வீடியோவும் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்