ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
|நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கூலி படத்தில் இடம்பெற்ற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தநிலையில், தற்போது சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் அமீர்கான் இணைந்து நடித்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு கூலி படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருhந்த நிலையில் 'சிகித்து வைப்' என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைத்த இப்பாடலை டி. ராஜேந்தர் மற்றும் அறிவு பாடியுள்ளனர்.