'கூலி' படத்திற்காக தாய்லாந்து சென்ற ரஜினி!
|நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் 2025 மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் ஜெய்ப்பூரில் அமீர் கானுடன் இணைந்து ரஜினி நடித்தார்.பான் இந்திய வணிகத்திற்காக படத்தில் பல மாநில நடிகர்களும் இணைந்து நடித்து வருவதால் கூலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
சமீபத்தில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் தாய்லாந்து செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், 'கூலியின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 13-ம் தேதி முதல் 28 வரை நடைபெறுகிறது.' என்றார்
அரசியில் தொடர்பான கேள்விகளை கேட்டபோது, அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று பலமுறை உங்களிடம் தெரிவித்து விட்டேன் என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து ரஜினியின் கேட்கப்பட்ட போது, அப்படியா? எப்போது நடந்தது என்று கேட்டார் ரஜினி. அந்த சம்பவம் விமர்சனங்களுக்கு உள்ளானதால் அதில் இருந்து செய்தியாளர்களை தவிர்த்து வருகிறார். அப்படியே பேசினாலும் அரசியல் கேள்விகளை தவிர்த்து வருகிறார்.