< Back
சினிமா செய்திகள்
இந்தி மட்டுமல்ல,  பெண்கள் மீதான திணிப்புக்கும் எதிரான படம்தான் ரகு  தாத்தா – கீர்த்தி சுரேஷ்
சினிமா செய்திகள்

இந்தி மட்டுமல்ல, பெண்கள் மீதான திணிப்புக்கும் எதிரான படம்தான் 'ரகு தாத்தா' – கீர்த்தி சுரேஷ்

தினத்தந்தி
|
21 July 2024 6:38 PM IST

"இந்தி மட்டுமல்ல எல்லா விதமான திணிப்புக்கும் எதிரான படம்தான் ரகு தாத்தா" என இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தசரா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

டீசரில் கீர்த்தி சுரேஷ் பேசும் 'இந்தி தெரியாது போடா', தமிழ்ல சொல்லுங்க சார் ஒன்னும் புரியல' போன்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்நிலையில், 'ரகு தாத்தா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, மேடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:- "ரகு தாத்தா.. பெண்கள் மீதான திணிப்பு பற்றியது. டீசரிலும் பார்த்திருப்பீர்கள். எல்லா விதமான திணிப்பு பற்றியும் தான் இந்த படம். இந்த படத்தில் சின்ன மெசேஜ் சொல்ல முயற்சி செய்திருக்ககோம். ஆனால், உபதேசம் சொல்ற மாதிரி இருக்காது. இந்தப் படம் பார்க்கும்போது தெரியும். இதில் எந்த அரசியல் சாயலும், சர்ச்சைக்குரியதாகவும் எதுவும் இல்லை. படத்திற்கு வரும் மக்கள், ஜாலியாக படத்தை பார்த்து செல்லும் வகையில் கதை அமைந்திருக்கும்." என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' படமும் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளநிலையில், அதற்கு போட்டியாக 'தங்கலான்' படமும் அதே நாளில் வெளியாவதாக தகவல் வெளியாகி இருப்பது இருவரது ரசிகர்களையும் உற்சாகமடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்