விபத்தில் சிக்கிய அஜித் குறித்து அப்டேட் கொடுத்த ரேஸிங் அணி வீரர்
|அஜித் ரேஸிங் அணி வீரர் பேபியன் டுபியக்ஸ், அஜித் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
துபாய்,
அஜித் நடிப்பு மட்டுமில்லாமல் பைக் மற்றும் கார் ஓட்டுவதிலும் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். சமீபத்தில் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கிய அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார்.
கார் ரேஸ் வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் அஜித் துபாய் சென்றார். நேற்று அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் ஓட்டிக் கொண்டிருந்த கார் ரேஸ் டிராக் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. விபத்தில் நடிகர் அஜித் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இந்நிலையில், விபத்தில் சிக்கிய அஜித் குறித்து அஜித் ரேஸிங் அணி வீரர் பேபியன் டுபியக்ஸ் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'அஜித் சிறு காயங்கள் கூட இன்றி நலமாக இருக்கிறார். இடையூறுகள் எதுவாக இருந்தாலும் ரேஸிங் மீதான எங்களின் ஆர்வம் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளவும், தொடர்ந்து முன்னேறவும் எங்களை தூண்டுகிறது. இந்த பாதை பாடங்கள் நிறைந்தது. அதை ஒரு அணியாகவும், குடும்பமாகவும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்" என்றார்.