'அதுவரை எந்த ஓடிடியிலும் 'புஷ்பா 2' வெளியாகாது' - வதந்திகளுக்கு படக்குழு விளக்கம்
|புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் தொடர்ந்து பரவி வந்தது.
சென்னை,
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படத்தின் தொடர்ச்சியாக தற்போது 'புஷ்பா 2 தி ரூல்' வெளியாகி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருக்கின்றனர்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் கடந்த 5-ந் தேதி வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, வெறும் 6 நாட்களிலேயே ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. தற்போது வரை ரூ.1,508 கோடி வரை அதிகாரபூர்வமாக வசூல் செய்துள்ளநிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் தொடர்ந்து பரவி வந்தது.
இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி பரவும் வதந்திகளுக்கு படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், 'புஷ்பா 2' பட ஓடிடி ரிலீஸ் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. படத்தை பெரிய திரைகளில் கண்டு மகிழுங்கள். 56 நாட்கள் முடிவதற்கு முன் எந்த ஓடிடியிலும் 'புஷ்பா 2' வெளியாகாது' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.