'புஷ்பா 2' : ரிலீஸுக்கு முன்பே ரூ.1,000 கோடி வசூல்
|அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 6-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்' . இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பின்னர், 'புஷ்பா 2 தி ரூல்' படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர்.
இந்தநிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரம் ரூ.1,000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமை ரூ.660 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.220 கோடிக்கும், வட இந்தியாவில் ரூ.200 கோடிக்கும், தமிழ்நாட்டில் ரூ.50 கோடிக்கும், கர்நாடகாவில் ரூ.30 கோடிக்கும், கேரளாவில் ரூ.20 கோடிக்கும், வெளிநாடுகளில் ரூ.140 கோடிக்கும் 'புஷ்பா 2' படத்தின் திரையரங்க உரிமை விற்பனையாகியுள்ளது.
'புஷ்பா 2' படத்தின் சாட்லைட் உரிமை ரூ.85 கோடிக்கும், இசை உரிமை ரூ.65 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது. இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.275 கோடிக்கு பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியான பின்னர் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.