தேவிஸ்ரீ பிரசாத் பேசியதில் எந்த தவறும் இல்லை - 'புஷ்பா 2' தயாரிப்பாளர்
|‘புஷ்பா 2’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளருக்கு எதிராக பல்வேறு விஷயங்களை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசிய நிலையில், “அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை” என ‘புஷ்பா 2’ தயாரிப்பாளர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெற்றது.
புஷ்பா 2' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தேவி ஸ்ரீ பிரசாத் பேசும்போது, "தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளமாக இருந்தாலும் சரி, ஒரு பணிக்கான பெயராக இருந்தாலும் சரி, அதை நாம் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் கோரவில்லை என்றால் யாரும் நமக்குத் தகுதியான நன்மதிப்பைக் கொடுக்க மாட்டார்கள். ரவி சார், நான் பாடலையோ பின்னணி இசையையோ சரியான நேரத்தில் வழங்கவில்லை என்று கூறி என்னைக் குறை கூறுகிறீர்கள். நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் அன்பு இருக்கும் இடத்தில் புகார்களும் இருக்கும். இருப்பினும், அன்பை விட என் மீது உங்களுக்கு அதிக புகார்கள் இருப்பது போல் தெரிகிறது.
இப்போதும், 'தவறான நேரம், நீங்கள் தாமதமாக வந்தீர்கள்' என்று சொல்கிறீர்கள். நான் என்ன செய்வது? நான் 25 நிமிடங்களுக்கு முன்பு இங்கு வந்தேன், ஆனால் நீங்கள் உள்ளே வருவதை படமாக்க வேண்டும் என்று கூறி காக்க வைத்துவிட்டார்கள். அது எனது தவறில்லை." என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் தேவி ஸ்ரீ பிரசாத்.
'புஷ்பா 2'படத்தின் பின்னணி இசையை தேவிஸ்ரீ பிரசாத் அமைக்கவில்லை. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மற்றும் தமன் பின்னணி இசை அமைத்துள்ளதாக தகவல் வெளியானது . மேலும் 'குட் பேட் அக்லி' படத்திலிருந்தும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அவரை நீக்கியது. அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் அது என்று பலரும் பேசி வருகிறார்கள்.
இந்தப் பேச்சின் மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இருவருக்கும் பிரச்சினைகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் இதனை மறுத்துள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'புஷ்பா 2' படத்தின் தயாரிப்பாளரிடம், "தேவிஸ்ரீ பிரசாத்துக்கும் உங்களுக்கும் இடையில் பிளவு ஏற்படுத்துள்ளதா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ரவிசங்கர், "அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. இதை அவர் சினிமாவில் வரும் ஒரு வசனத்தை போல பேசினார். நகைச்சுவையாகதான் கூறினார். நாங்கள் அனைவரும் குடும்பம்போல இணைந்து இருக்கிறோம். இசைத் துறையில் தேவிஸ்ரீ பிரசாத் இருக்கும் வரை, எங்கள் படங்களுக்கு அவர் இசையமைப்பார். அதேபோல நாங்கள் படங்களை தயாரிக்கும் வரை, அவருடன் இணைந்து பணியாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.