'புஷ்பா 2': விஜய்யை முந்தி அதிக சம்பளம் வாங்கும் நடிகரானாரா அல்லு அர்ஜுன்?
|'புஷ்பா 2' படத்திற்காக அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.
'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் வருகிற டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றி டிசம்பர் 5ம் தேதியே உலகளவில் வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்தது.
இந்நிலையில், இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அல்லு அர்ஜுன் இதற்காக ரூ.300 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் விஜய்யை அல்லு அர்ஜுன் முந்துவார்.
முன்னதாக, எச். வினோத் இயக்கும் 'தளபதி 69' படத்திற்காக விஜய் ரூ. 275 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்பட்டது, இதன்மூலம் ரூ. 250 கோடி சம்பளம் பெற்ற ஷாருக்கானை முந்தி அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகராக விஜய் உருவெடுத்தார். ஆனால், 'புஷ்பா 2' படத்திற்காக ரூ.300 சம்பளம் பெற்று விஜய்யின் சாதனையை அல்லு அர்ஜுன் முறியடித்துள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இருப்பினும், இது குறித்த எந்த அதிகாரபூர்வமாக தகவலும் வெளியாகவில்லை.