"பிளடி பெக்கர்" படத்திற்கு கவின் சரிப்பட்டுவரமாட்டான் … இயக்குனரிடம் சொன்ன நெல்சன்!
|"பிளடி பெக்கர்" படத்திற்கு கதாநாயகனாக கவின் வேணும் என இயக்குனர் சிவபாலன் கூறும் போது நான் அதை மறுத்தேன் என்று படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் கூறியுள்ளார்.
சென்னை,
பிரபல இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பிளடி பெக்கர்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்நிலையில் 'பிளடி பெக்கர்' படத்தின் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடிகர் கவின், அதனுடன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நெல்சன் பேசியதாவது " முதலில் இப்படத்திற்கு கதாநாயகனாக கவின் வேணும் என இயக்குனர் சிவபாலன் கூறும் போது நான் அதை மறுத்தேன் அப்பொழுது கவினின் டாடா திரைப்படம் வெளியாகவில்லை. சிவபாலனிடம் நீ நட்புக்காக எதுவும் செய்ய வேண்டாம் அதை தனியாக செய்துக்கொள் என்றேன்.
கவின் வேண்டவே வேண்டாம் என்று சிவபாலனிடம் சொன்னேன். ஏனென்றால் பெக்கர் கதாபாத்திரம் கவினுக்கு செட்டாகுமா? இந்த கதை செட்டாகுமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.ஆனாலும் அவன் பிடிவாதமாக எனக்கு கவின் தான் கதாநாயகனாக வேண்டும் என்றான். படப்பிடிப்பு பணி முடித்தப்பின் திரைப்படத்தை பார்த்த பிறகுதான் தெரிகிறது. கவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த கதாப்பாத்திரத்தில் இவரை தவிர வேறு ஒருவரை பொறுத்தி பார்க்க முடியவில்லை. இதற்குமுன் இப்படத்திற்கு நடிகர் தனுஷ் அல்லது விஜய் சேதுபதியைதான் நடிக்க வைக்க வேண்டும் என இருந்தேன்" என கூறினார்.