'குஷி 2' படம் குறித்த பேச்சால் சர்ச்சை : விளக்கமளித்த பிரியங்கா மோகன்
|சூர்யாவின் சனிக்கிழமை பட பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா மோகன் குஷி 2 குறித்து பேசியது சர்ச்சையானது.
சென்னை,
நடிகை பிரியங்கா மோகன் தற்போது நானி நடிப்பில் வெளியான சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் வெற்றியில் உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இவர் குஷி 2 குறித்து பேசியது சர்ச்சையானது.
அதில், 'எஸ்.ஜே. சூர்யா குஷி 2 படத்தை இயக்கினால் அதில் நடிகர் பவண் கல்யானைதான் நடிக்க வைக்க வேண்டும்' என கூறியிருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் கோபமடைந்து பிரியங்கா மோகனை விமர்சிக்கத் தொடங்கினார்கள். தற்போது அதற்கு பிரியங்கா மோகன் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
'தற்போது நான் பவண் கல்யான் நடிக்கும் ஓஜி படத்தில் நடிக்கிறேன். அந்த நேரத்தில்தான் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மேடை ஏறும்போது எல்லோரும் 'ஓஜி' 'ஓஜி' என கத்தத் தொடங்கிவிட்டார்கள். இதனால்தான் நான் பவண் கல்யாண் நடித்த குஷி படத்தை குறிப்பிட்டேன்.
தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இருந்ததால் அந்த சமயத்தில் எனக்கு தமிழ் குஷி நியாபகம் வரவில்லை. நாங்கள் அங்கு சென்றாலே குஷி 2 எப்போது என கேட்பார்கள். அதானால்தான் நானும் ஒரு ரசிகையாக குஷி 2 எப்போது என எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டேன்.
எனக்கு 2 குஷி படமுமே பிடிக்கும். ஆனால் நான் முதலில் பார்த்தது விஜய் சார் நடித்த குஷி படத்தைதான். அந்த படத்தைப் பார்த்துவிட்டு நான் விஜய் பேன் ஆனேன்' என்றார்.
கடந்த 2000-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் குஷி. இதன் ரீமேக்காக தெலுங்கில் உருவான குஷியில் பவன் கல்யாண் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.