'ஆச கூட' பாடல் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து பேசிய பிரீத்தி முகுந்தன்
|கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் பிரீத்தி முகுந்தன்.
சென்னை,
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'ஓம் பீம் புஷ்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரீத்தி முகுந்தன். அதனைத்தொடர்ந்து, கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான இவர் சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'ஆச கூட' ஆல்பம் பாடலில் நடனமாடி பிரபலமானார்.
இந்நிலையில், 'ஆச கூட' பாடலுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பிரீத்தி முகுந்தன் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'நான் நடிகை என்ற அடையாளத்தை பெறுவதற்கு நடனம் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது. 'ஆச கூட' பாடலுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த அளவுகடந்த பாராட்டு ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு ஒரு மனிதனாக பல வழிகளில் வளர்ந்திருக்கிறேன்.
2024 எனக்கு நம்பமுடியாததாக இருந்திருக்கிறது. எனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்திலேயே அர்ப்பணிப்புடனும், ஆர்வமுடனும் பணியாற்றும் கலைஞர்களுடன் பணிபுரிவது சிறப்பாக உள்ளது.
அடுத்த வருடத்தில் புதிய கதாபாத்திரங்களில் நடித்து என்னை நானே சோதித்து பார்க்க விரும்புகிறேன். இன்னும் அறிவிக்கப்படாத சில அருமையான படங்கள் என்னிடம் உள்ளன. அதை விரைவில் பகிர்ந்து கொள்வேன்' என்றார்.