பிரம்மயுகம் இயக்குநர் படத்தில் பிரணவ் மோகன்லால்
|நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகின் பிரபல நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் திரைப்பட தயாரிப்பாளரான கே.பாலாஜியின் மகளான சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஸ்மயா மோகன்லால் என்ற மகளும், பிரணவ் மோகன்லால் என்ற மகனும் உள்ளனர்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுசித்ரா தனது மகன் விவசாய பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். அதாவது, பிரணவ் ஸ்பெயின் நாட்டில் உள்ள விவசாய பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். தங்குமிடம் மற்றும் உணவுக்காக சம்பளம் எதுவும் வாங்காமல் அவர் வேலை செய்து வருகிறார். சில சமயங்களில் குதிரை, ஆடு போன்றவற்றையும் கவனித்துக் கொள்கிறார். அது அவருக்கு ஒரு அனுபவமாக அமைந்துள்ளது.
அந்த பயணம் முடிந்ததும், அங்கு நடந்த அனுபவங்களை என்னிடத்தில் பகிர்ந்து கொள்வார். ஆண்டுக்கு 2படங்கள் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன், ஆனால் அவர் 2 ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கிறார். என் கணவரும், என் மகனும் இணைந்து நடிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. இருவரையும் ரசிகர்கள் ஒப்பிட்டு பார்ப்பது தனக்கு பிடிக்காது" என்று தெரிவித்தார்.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரணவ் மோகன்லால், 2015-ல் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் இவரது நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஹிருதயம்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் 'வர்ஷங்களுக்கு சேஷம்' என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் படம் கருப்பு வெள்ளை திரைப்படமாகவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் உலகளவில் ரூ.80 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.