'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
|‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம் வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'பேட்ட ராப்'. இதனை தொடர்ந்து, நாயகனாக 'மூன் வாக்' திரைப்படத்திலும் பிரபுதேவா நடிக்கிறார். பிரபுதேவா தமிழில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் விஜய்யின் 'கோட்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சக்தி சிதம்பரம் இயக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைக்க கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். படத்தினை ட்ரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஆண்ட்ரியா குரலில் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் 'போலீஸ் காரனை கட்டிகிட்டா' பாடல் சமீபத்தில் வெளியானது. படத்தின் 'ஊசி ரோசி' பாடலை ஜி.வி பிரகாஷ் பாடியுள்ளார்.
இந்நிலையில் 'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இப்படம் வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவாவுக்கு இது 3ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.