< Back
சினிமா செய்திகள்
கே.ஜி.எப்  பட தயாரிப்பு நிறுவனத்தின்  3 படங்களில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தம்
சினிமா செய்திகள்

கே.ஜி.எப் பட தயாரிப்பு நிறுவனத்தின் 3 படங்களில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தம்

தினத்தந்தி
|
8 Nov 2024 6:59 PM IST

கே.ஜி.எப் பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே, நடிகர் பிரபாஸின் பட ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக ஹொம்பாலே பிலிம்ஸ் மாறியுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்தினை இயக்கினார். இந்தப் படத்தினையும் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. இப்படம் 700 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்நிலையில், ஹொம்பாலே பிலிம்ஸின் அடுத்த 3 படங்களில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார். இதனை முன்னிட்டு சலார் 2 திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026, 2027, 2028 ஆகிய ஆண்டுகளில் 3 படங்கள் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிரபாஸ் 24வது படமாக தி ராஜா சாப் உருவாகி வருகிறது. 25வது படமாக சந்தீப் வங்கா இயக்கும் ஸ்பிரிட் படம் உருவாகவிருக்கிறது.

அடுத்த 3 ஆண்டுகளில் பிரபாஸ் நடிக்க இருக்கும் மூன்று திரைப்படங்களை தயாரிக்கப் போவதாக ஹோம்பலே நிறுவனம் அறிக்கை மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில், "இந்திய சினிமாவில் சாராம்சத்தை கொண்டாடி அதை உலகிற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில் ரெபெல் ஸ்டார் பிரபாஸுடன் இணைந்து மூன்று அற்புதமான படங்களின் கூட்டணியில் இணைவதில் பெருமை அடைகிறோம். எனவே மறக்க முடியாத சினிமா அனுபவங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பு இது. தயாராகுங்கள், 'சலார் 2' படத்துடன் இந்த பயணம் தொடங்குகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபாஸ், பிருத்விராஜ் ஆகியோர் நடிக்கும் 'சலார் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு 2026ம் ஆண்டில் தொடங்கப்படும் என்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தப் படங்களுக்கு பின் பிரபாஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயியுள்ளன.

மேலும் செய்திகள்