'எஸ்கே 25' திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியானது
|நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், 'அமரன்' படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' (எஸ்கே 25) எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தை சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு, இப்படத்தின் பூஜை நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலானநிலையில், தற்போது 'எஸ்கே 25' திரைப்படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.