ஆந்திர முதல்-மந்திரி மீது அவதூறு: நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு
|ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது அவதூறு கருத்தை பதிவு செய்த பிரபல நடிகை ஸ்ரீரெட்டி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த 2011ம் ஆண்டு, 'நேனு நானா அபத்தம்' என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார். பின் அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுவதும் இவர் பிரபலமானார் . நடிகர் விஷால், நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாகப் பல்வேறு புகார்களை வெளிப்படையாக அறிவித்தார். தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீதும் அடுக்கடுக்கான புகார்களை அவர் கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல் மந்திரி பவன் கல்யாண் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்து வருகின்றனர்.
போலீசார் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்தனர். விரைவில் அவரை விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது அவதூறு கருத்தை பதிவு செய்த பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.