< Back
சினிமா செய்திகள்
தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம்  நாடாளுமன்றத்தில் திரையிடல்;  பிரதமர் மோடி கண்டுகளிப்பு
சினிமா செய்திகள்

'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படம் நாடாளுமன்றத்தில் திரையிடல்; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

தினத்தந்தி
|
2 Dec 2024 9:12 PM IST

சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரையிடலில் கலந்துகொண்டனர்.

புது டில்லி,

குஜராத் கலவரம் மற்றும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படம் இன்று மாலை 4 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் திரையிடப்பட்டது.

படத்தை பார்வையிட வருகை தந்த பிரதமர் மோடியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் இணைந்து பிரதமர் மோடி இப்படத்தைப் பார்த்தார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, குஜராத்தைச் சோ்ந்த கரசேவகா்கள் அயோத்திக்கு சென்றுவிட்டு சபா்மதி விரைவு ரயிலில் சொந்த ஊா்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு சிலா் தீ வைத்தனா். இதில் 59 கரசேவகா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை பல இடங்களில் கட்டுக்கு அடங்காத மதக் கலவரமாக மாறியது. வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அப்போது நடைபெற்ற தொடா் சம்பவங்களைத் தழுவி ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட சபா்மதி ரிப்போா்ட் திரைப்படம். இந்தப் படத்தை தீரஜ் சர்னா இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு பா.ஜ.க அரசியல் தலைவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை 'தி சபர்மதி ரிப்போர்ட்' படத்தின் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி சந்தித்துள்ளார். இப்படத்தை பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஏற்கனவே பாராட்டி இருந்தனர். இந்த படம் குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில், உண்மை தற்போது வெளிவந்துள்ளது சிறப்பு. பொய் பிரசாரங்கள் நீண்ட காலம் நிலைக்காது. காலப்போக்கில் உண்மை வெளிவந்தே தீரும்' என்றதும் குறிப்பிடத்தக்கது.

இப்படம், கடந்த நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்துக்கு உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், ஒடிசா, ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன.

மேலும் செய்திகள்