ஜோஜு ஜார்ஜின் 'பணி' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
|ஜோஜு ஜார்ஜ் பணி திரைப்படத்தை பழிவாங்கும் கதையை மையமாக வைத்து திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கியுள்ளார்.
ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர் சூர்யா - 44 மற்றும் கமலுடன் தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் 7 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
நடிகர் ஜோஜு ஜார்ஜ், பணி என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடித்தும் உள்ளார். நாடோடிகள் அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஜய், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்கள். கேரளாவின் திருச்சூரில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த திரில்லர் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 24-ம் தேதி வெளியானது. மலையாளத்தில் உருவான 'பணி', இந்தி, தெலுங்கு, கன்னடத்திலும் வெளியாக இருக்கிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பணி படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நாயகன் ஜோஜு ஜார்ஜ் உறவினர்களுடன் தாதாவாக வலம் வருகிறார். இவர்களைப் பார்த்து ஊரே நடுங்குகிறது. இன்னொருபுறம் இரண்டு இளைஞர்கள் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு கூலிப்படையாக மாறுகிறார்கள். ஒருவரை கொலை செய்து ரூ.10 லட்சம் பெற்றுக் கொள்கின்றனர்.
இந்த சூழலில் ஜோஜு ஜார்ஜ் மனைவி அபிநயா இவர்கள் கண்களில் படுகிறார். அவரது அழகில் மயங்கிய இருவரும் அபிநயாவை சீண்டுகின்றனர். அவர்களை ஜோஜு ஜார்ஜ் அடித்து துவைக்கிறார். ஆத்திரமாகும் இளைஞர்கள் ஜோஜு ஜார்ஜை பழிவாங்க துடிக்கிறார்கள். இதனால் ஜோஜு ஜார்ஜ் குடும்பத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? பதிலுக்கு இரண்டு இளைஞர்களையும் ஜோஜு ஜார்ஜ் என்ன செய்தார்? என்பது மீதி கதை..
ஜோஜு ஜார்ஜ் கட்டுமஸ்தான தோற்றம், பார்வை, உடல்மொழியில் தாதாவை கண்முன் நிறுத்துகிறார். மனைவியிடம் அதீத அன்பு, குடும்பத்தினர் மீது பாசம், கோபம் என்று உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்தில் வெளுத்துள்ளார். அபிநயா அழகில் வசீகரிக்கிறார். ரவுடிகளிடம் சிக்கி போராடும் காட்சிகளில் பரிதாபம். சாகர் சூர்யா, ஜூனாயஸ் இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகின்றனர். பயங்கர தாதா குடும்பத்தையே நிலை குலைய வைக்கும் இவர்களின் சைக்கோத்தன நடிப்பு படத்துக்கு பெரிய பலம்
சீமா, சுஜித் சங்கர், பிரஷாந்த் அலெக்சாண்டர், பாபி குரியன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பு விஷ்ணு விஜய், சாம் சி.எஸ். இசை பலம், வேணு, ஜிண்டோ ஜார்ஜ் ஒளிப்பதிவு காட்சிகளை திகிலாக்கி உள்ளது. இரு இளைஞர்களை போலீஸ் படையாலும் தாதாக்கள் கூட்டத்தாலும் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது லாஜிக் மீறல் வழக்கமான தாதா கதையை வித்தியாசமான கோணத்தில் மர்மம், சஸ்பென்சில் விறுவிறுப்பாக நகர்த்தி தரமான படைப்பாக கொடுத்து கவனம் பெறுகிறார் இயக்குனர் ஜோஜு ஜார்ஜ்.