பிரபல பாலிவுட் நடிகை வீட்டில் வைர நகை திருடிய பெயிண்டர் கைது
|பிரபல பாலிவுட் நடிகை பூனம் தில்லான் வீட்டில் இருந்த வைர கம்மலை திருடிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை பூனம் தில்லான். 1978-ம் ஆண்டு 16 வயதில் 'மிஸ் யங் இந்தியா' பட்டம் வென்றவர். இவர் 'நூரி' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார். மேலும் ரெட் ரோஸ், ரொமான்ஸ், கர்மா, நாம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.
இந்த நிலையில், நடிகை பூனம் தில்லான் தனது வீட்டில் இருந்து ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள வைர கம்மல் மற்றும் 500 அமெரிக்க டாலர்கள் திருடு போனதாக போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில், டிசம்பர் 28 முதல் ஜனவரி 5-ந் தேதி வரை மும்பை கர் பகுதியில் உள்ள நடிகை பூனம் தில்லானின் வீட்டில் பெயிண்ட் அடிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட சமீர் அன்சாரி (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். பெயிண்ட் அடிக்கும் வீட்டின் அலமாரியில் இருந்த வைர நகையை திருடியுள்ளது தெரியவந்தது.
பின்னர், அவரிடம் இருந்து போலீசார் ரூ.25,000 ரொக்கம், 500அமெரிக்க டாலர்கள் மற்றும் வைர கம்மலை மீட்டனர். இதற்கிடையில் திருடப்பட்ட பணத்தில் தன்னுடன் பெயிண்ட் அடித்த குழுவிற்கு விருந்து கொடுப்பதற்காக அவர் ரூ 9,000 செலவிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.