'லால் சலாம்' படத்தின் ஓ.டி.டி.யில் தொலைந்து போன பகுதியை சேர்த்துள்ளோம் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
|திரையரங்கில் வெளியானதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் 'லால் சலாம்' படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழில் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். 3 படம் ரிலீசுக்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அப்படத்திற்காக அனிருத் இசையில் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் தான்.ஆனால் படத்தின் திரைக்கதை சொதப்பலாக இருந்ததால் படம் ரிலீஸ் ஆகி தோல்வியை தழுவியது.
கெளதம் கார்த்திக் நடித்த 'வை ராஜா வை' திரைப்படத்தை இயக்கி இருந்தார் ஐஸ்வர்யா. சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படத்திற்கு திரைக்கதை அமைத்திருந்தார் ஐஸ்வர்யா, அதுமட்டுமின்றி இதன் கிளைமாக்ஸில் தனுஷை கொக்கி குமாராக கெஸ்ட் ரோலில் வர வைத்து பில்டப் கொடுத்திருந்தார்கள். இருந்தாலும் இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகினார் ஐஸ்வர்யா.
சுமார் 7 ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா, கடந்த 2022-ம் ஆண்டு தனுஷை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்த கையோடு, சினிமாவில் லால் சலாம் என்கிற படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் அறிவித்தார். கிரிக்கெட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா இயக்கிய அப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கேரக்டரில் நடித்திருந்தும் சொதப்பலான திரைக்கதையால் படம் படுதோல்வியை சந்தித்தது.
லால் சலாம் படத்தின் தோல்விக்கு பின் பேட்டியளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்படத்தின் சில முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் தொலைந்துவிட்டதால் படம் சொதப்பிவிட்டதாக கூறி அதிர்ச்சியளித்தார். அந்த ஹார்ட் டிஸ்க் தொலையாமல் இருந்திருந்தால் நாங்கள் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாகக் கூறியிருப்போம் என்றார். மேலும், தனது தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டதாகவும். ஒரு இயக்குநராக இது தனக்கு பெரிய அனுபவமாக இருந்ததாகவும் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில், ' தொலைந்து போன ஹார்ட் டிஸ்கில் இருந்து சில காட்சிகளை மீட்டுள்ளோம். இந்த காட்சிகளை உள்ளடக்கிய டைரக்டர்ஸ் கட் ஒன்று ஓ.டி.டி.யில் வெளியாகும் என்றும், திரையரங்கில் வெளியானதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் பிரதி முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அது நான் எடுக்க நினைத்த படமாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.