கார் விபத்தில் நடிகை ஊர்மிளா காயம்; ஒருவர் பலி
|மும்பையில் நடந்த கார் விபத்தில் நடிகை ஊர்மிளா காயமடைந்தார். கார் மோதியதில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்,
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர் 1990களில் இந்தித் திரைப்படங்களில் கொடிகட்டிப் பறந்த நாயகியாக இருந்தார். இவருக்கென இந்தி திரையுலகில் தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. இவர் 1996-ம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக திகழ்ந்தார்.
சினிமா, நடிப்பு மட்டுமின்றி அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் ஊர்மிளா மடோன்கர். இவர் காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும், மாடலுமான மொஹ்சின் அக்தர் மிர் என்பவரைக் காதலித்து வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் எனக்கோரி மும்பை கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மும்பையில் போட்டியிட்டு பா.ஜ.க வேட்பாளரிடம் தோற்றார். அதன் பிறகு அவர் சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இன்று காலை நடிகை ஊர்மிளா படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. கார் சாலையோரம் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் டிரைவர் மற்றும் நடிகை ஊர்மிளா காயமடைந்தனர். மேலும் விபத்தில் ஒரு தொழிலாளி இறந்தார், மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
சரியான நேரத்தில் காரின் ஏர்பேக்குகள் திறக்கப்பட்டதால் நடிகை ஊர்மிளா உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.