'தங்கலான்', 'யுத்ரா' படங்களுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி பகிர்ந்த மாளவிகா மோகனன்
|படம் வெளியான பின் எதுவும் நம் கைகளில் இருக்காது என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
சென்னை,
மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' 'மாறன்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்திலும் சித்தாந்த் சதுர்வேதியுடன் 'யுத்ரா' படத்திலும் நடித்திருந்தார்.
இதில், 'தங்கலான்' படத்தில் இவரது நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. மேலும், இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலும் ஈட்டியது. மறுபுறம், இவர் நடித்த 'யுத்ரா' அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மாளவிகா மோகனன், படம் வெளியான பின் எதுவும் நம் கைகளில் இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறிகையில்,
'ஒவ்வொரு படத்திற்கும் தனிப்பட்ட பயணம் உண்டு. கடினமான உழைப்பை மட்டுமே ஒரு படத்திற்கு நம்மால் கொடுக்க முடிந்த ஒன்று. படம் வெளியான பிறகு எதையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. எதுவும் நம் கைகளில் இருக்காது, கடவுள் கைகளில் உள்ளது.
தங்கலான் படத்தில் எனது நடிப்புக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நடித்த கதாபாத்திரங்களில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நடிக்க மிகவும் சவாலாக இருந்த கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்' என்றார்.
மாளவிகா மோகனன் தற்போது தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக தி ராஜாசாப் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படத்திலும் நடித்து வருகிறார்.