அமிதாப், ரஜினி இல்லை... ஒரு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் யார் தெரியுமா?
|70 மற்றும் 80களில் இந்தியத் திரைப்படங்களின் தரம் வளர்ந்ததால் நடிகர்களின் சம்பளமும் உயர்ந்தது.
சென்னை,
70 மற்றும் 80களில் இந்தியத் திரைப்படங்கள் பெரிய அளவில் வளர்ந்ததால் நடிகர்களின் சம்பளமும் உயர்ந்தது. அதன்படி, அப்போது உச்ச நடிகராக இருந்த அமிதாப்பச்சன் தனது சம்பளத்தை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தினார். இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் அமிதாப் இருந்தார்.
ஆனால், இது 90-களில் முறியடிக்கப்பட்டது. அதை உடைத்தது ஒரு தென்னிந்திய நடிகர். அவர்தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான 'ஆபத்பாந்தவுடு' படத்திற்காக ரூ.1.25 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார். இதன் மூலம் ஒரு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை சிரஞ்சீவி பெற்றார்.
அப்போது மற்ற முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சன்னி தியோல் ஆகியோர் ஒரு படத்திற்கு ரூ.60-80 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக தகவல் தெரிவிக்கின்றன. 1994-ம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இணைந்தார்கள். தற்போது சிரஞ்சீவி ஒரு படத்திற்கு ரூ.40 கோடி வாங்குவதாக தெரிகிறது.
இந்நிலையில், 69 வயதாகும் சிரஞ்சீவி 'விஸ்வம்பரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்து இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மீனாட்சி சவுத்ரி மற்றொரு நாயகியாகவும், சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது