'முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் எனக்கு ஆதரவாக பேசவில்லை' - நடிகை விசித்ரா
|நடிகை விசித்ரா தனக்கு இதைபோல நடந்தபோது 'முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் ஆதரவாக இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை,
ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், நடிகை விசித்ரா தனக்கு இதைபோல நடந்தபோது 'முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் தனக்கு ஆதரவாக இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'கமிட்டியை காலம் தாழ்த்திதான் அமைத்திருக்கிறார்கள். ஏனென்றால், இதற்கு முன்பே பல புகார்கள் வந்திருக்கின்றன. நானே எனக்கு நேர்ந்ததை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது கூறினேன். அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் எனக்கு ஆதரவாக பேசவில்லை.
முன்பை விட தற்போது பெண்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்னும்போது அதற்கு முன்னணி நடிகர், நடிகைகள் கண்டிப்பாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இன்னும் நிறைய பெண்கள் பேச முன் வருவார்கள்.
கேரளாவைபோல தமிழ் நாட்டிலும் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும். அதற்கு நீதியை வாங்கிதரக்கூடிய நல்ல தலைவரை நியமிக்க வேண்டும். விசாரணை கமிட்டி கண் துடைப்பாக இருக்ககூடாது, என்றார்.