வன்முறையை யாரும் ஆதரிக்கக்கூடாது - ரசிகர்கள் செயலுக்கு நடிகை வேதிகா கண்டனம்
|கொண்டாட்டம் என்ற பெயரில் எந்த மிருகத்தையும் பலியாக்காதீர் என்று ரசிகர்களுக்கு நடிகை வேதிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கத்தில் வெளியான படம் 'தேவரா'. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாகவும் பிரகாஷ் ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கில் படமாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
ஜூனியர் என்டிஆரின் 30வது படமான தேவரா நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
இப்படத்தினை வரவேற்க வழக்கம் போல் முதல் நாள் முதல் காட்சியின்போது பட்டாசு வெடித்து பேனருக்கு பால் அபிஷேகம் செய்து மேளதாளத்துடன் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் ஈடுபட்டனர். இதில் ஆந்திராவிலுள்ள ஒரு திரையரங்கில் ஆட்டை வெட்டி அதன் இரத்தத்தை ஜுனியர் என்.டி.ஆரின் பேனர் மீது தெளித்து அவரது ரசிகர்கள் கொண்டாடியது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
அந்த வகையில் வேதிகா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "இது மோசமானது. நிறுத்துங்கள். அந்த அப்பாவி ஜீவனுக்காக எனது ரத்தம் சிந்துகிறது. இதுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது. இவ்வளவு சித்திரவதை ஒரு அப்பாவி குரலற்ற உயிரினத்திற்கு எப்படி செய்ய முடியும். இது ஒரு போதும் வேறு எந்த உயிரினத்திற்கும் நிகழக்கூடாது. இனிமேல் கொண்டாட்டம் என்ற பெயரில் எந்த மிருகத்தையும் ரசிகர்கள் பலியாக்க மாட்டார்கள் என நம்புகிறேன். இது போன்ற வன்முறையை யாரும் ஆதரிக்கக்கூடாது. அதனால் தயவு செய்து இதை நிறுத்துங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேவரா திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.172 கோடி வசூல் செய்துள்ளது.