'அஜித்துக்கு யாரும் போட்டி கிடையாது' - அருண் விஜய்
|நடிகர் அஜித் படமும், 'வணங்கான்' படமும் பொங்கலுக்கு மோதுகின்றனவா? என்ற கேள்விக்கு நடிகர் அருண் விஜய் பதிலளித்தார்
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அருண் விஜய். இவர் தற்போது, இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
நேற்று நடிகர் அருண் விஜய் தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து, இவர் நேற்று சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அஜித் படமும், 'வணங்கான்' படமும் பொங்கலுக்கு மோதுகின்றனவா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்,
'அஜித் சார் ஒரு உச்சம். அவருக்கு யாரும் போட்டி கிடையாது. அவரின் ரசிகர்களும் என்னை நேசிக்கிறார்கள். ஒருவேளை அவரின் படமும் பொங்கலுக்கு ரிலீஸானால் அதன்மூலம் எங்களுக்கும் ஒரு வழி கிடைக்கும் என்றே நம்புகிறேன்' என்றார். அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.