'நான் எவ்வளவு சாதித்தாலும் அதை தமிழ் மண்ணுக்கே சமர்ப்பிப்பேன்' - அல்லு அர்ஜுன்
|அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதற்கிடையில் படத்தின் சில பாடல்கள் மற்றும் டிரெயல்ர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் டிரெய்லர் சுமார் 12 கோடிக்கும் அதிக பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தை உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா 'கிஸ்சிக்' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்படத்தின் புரமோஷன் பணிக்காக படக்குழுவினர் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று தமிழ் புரமோஷனுக்காக சென்னை தாம்பரத்திற்கு படக்குழுவினர் வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, நெல்சன் திலிப்குமார் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த நிலையில், நிகழ்ச்சியின் போது நடிகர் அல்லு அர்ஜுன் கூறியதாவது, "நான் பிறந்த இந்த மண்ணுக்கு அன்பான வணக்கம். என் தமிழ் மக்களே, என் சென்னை மக்களே, இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. இந்த ஒரு நாளுக்காக எத்தனையோ வருடங்கள் காத்து கொண்டிருக்கிறேன். புஷ்பா திரைப்பட புரமோஷன் பணிகளுக்காக நான் பல வெளிநாட்டிற்கு சென்றுள்ளேன். ஆனால் சென்னை வரும் போது அந்த உணர்வே வேறு. சென்னையில் இருந்து தான் என் தொழிலை தொடங்கினேன். என் முதல் 20 வருட வாழ்க்கையை நான் சென்னையில் தான் வாழ்ந்தேன். நான் எவ்வளவு சாதித்தாலும் அதை என்னுடைய ஆணி வேரான தமிழ் மண்ணுக்கு தான் சமர்ப்பிப்பேன், அனைவருக்கும் நன்றி" என கூறினார்.