< Back
சினிமா செய்திகள்
பேட் கேர்ள் படத்திற்கு  தணிக்கை சான்று கேட்டு இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை - சென்சார் போர்டு
சினிமா செய்திகள்

"பேட் கேர்ள்" படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை - சென்சார் போர்டு

தினத்தந்தி
|
27 Feb 2025 4:28 PM IST

வெற்றி மாறனின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேட் கேர்ள்’

சென்னை,

காக்கா முட்டை விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'பேட் கேர்ள்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அஞ்சலி , ரம்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்ணின் சுதந்திரமான முடிவுகளையும் காதல் தேர்வுகளையும் மையமாக வைத்து படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இசையை அமித் திரிவேதி மேற்கொண்டுள்ளார். இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது.


இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில், "ஒரு பிராமண பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த குலத்தை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. வெற்றிமாறன், அனுராக் கயாபிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியாது. பிராமண பெண்ணின் அப்பாவும், அம்மாவும் பழையவர்கள் இல்லை. இந்த காலகட்டத்திற்கு மாறாமல் இருக்கிறார்கள். உங்கள் சொந்த ஜாதி பெண்களிடம் இதை முயற்சியுங்கள். முதலில் உங்கள் சொந்த குடும்பத்திற்கு அதை வெளிப்படுத்துங்கள்" என இயக்குநர் ரஞ்சித்தின் பதிவைப் பகிர்ந்து காட்டமாக விமர்சித்தார். இவரின் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்தது. இந்த சர்சைகளுக்கு மத்தியில், பிரபல இயக்குனர் ஆர்.கே.செல்வமணி 'பேட் கேர்ள்' படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

'பேட் கேர்ள்' டீசரில் பிராமண பெண்களை கொச்சை படுத்தும் வகையிலும், மனதை புண்படுத்தும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி தணிக்கை சான்று வழங்கக்கூடாது என சென்சார் போர்டுக்கு உத்தரவிட கோரி கோவையை சேர்ந்த ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்க நிறுவன தலைவர் எஸ்.ராமநாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 'பேட் கேர்ள்' படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என்று சென்சார் போர்டு விளக்கம் அளித்துள்ளது. மேலும் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் சென்சார் போர்டுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படும் என்று சென்சார் போர்டு கூறியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கியுள்ள 'பேட் கேர்ள்' திரைப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்