< Back
சினிமா செய்திகள்
No Amitabh, Shah Rukh, Rajini... Do you know which Indian actor has given the most hits?
சினிமா செய்திகள்

அமிதாப், ஷாருக், ரஜினி இல்லை...மிக அதிக வெற்றிப்படங்களை கொடுத்த இந்திய நடிகர் யார் தெரியுமா?

தினத்தந்தி
|
12 Nov 2024 4:36 PM IST

இந்த நடிகர் 720 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

சென்னை,

இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான நடிகர் என்று சொன்னால் உடனே நமது எண்ணத்தில் வருவது, அமிதாப் பச்சன், ஷாருக்கான், திலீப் குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர்கள்தான்.

இவர்கள் ஒவ்வொருவரும், பல நடிகர்களால் கனவில் கூட செய்ய முடியாத அளவுக்கு அதிகமான வெற்றிகளைக் கொடுத்துள்ளனர். ஆனாலும், இவர்கள் யாரும் இந்தியாவில் அதிக வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கிடையாது.

ஏனென்றால் இவர்கள் அனைவரையும் விட நடிகர் ஒருவர் அதிக வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அவர் வேறுயாரும் இல்லை, மலையாள திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர்.

இவர் 720 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார், இது சிறிது காலத்திற்கு உலக சாதனையாக இருந்தது. இது மட்டுமில்லாமல் இரண்டு முறை ஒரு வருடத்தில் 30 படங்களில் நடித்து மற்றொரு உலக சாதனையும் படைத்தார்.

நசீர் ஹீரோவாக நடித்த படங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, அதாவது 350-500 வரையிலான படங்கள் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றன. அதில் 50 படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தன. இது எவ்வளவு பெரிய சாதனை என்பதை மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது உங்களுக்கு தெரிந்து விடும்

அதன்படி, அமிதாப் பச்சன் 50க்கும் மேற்பட்ட வெற்றிகளையும் அதில் 10 பிளாக்பஸ்டர்களையும் கொடுத்திருக்கிறார். அதேபோல், ரஜினிகாந்த், 80 க்கும் மேற்பட்ட வெற்றிகளையும் 12-க்கும் மேற்பட்ட பிளாக்பஸ்டர்களையும் கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு எவரும் எட்ட முடியாத சாதனை படைத்த நசீர் 1989-ம் ஆண்டு காலமானார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'கடதநாடன் அம்பாடி'.



மேலும் செய்திகள்