'புதிய நடிகர்கள், படத்திற்கு புதிய ஆற்றலைக் கொடுக்கிறார்கள்' - 'அஞ்சான்' பட நடிகர் பேச்சு
|இளம் நடிகர்களுடம் பணியாற்ற விரும்புவதாக நடிகர் மனோஜ் பாஜ்பாயி தெரிவித்துள்ளார்.
சென்னை,
கடந்த 1994-ம் அண்டு வெளியான 'டிரோஹ்கால்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மனோஜ் பாஜ்பாயி, அதே வருடம் ஷேகர் கபூர் இயக்கிய பண்டிட் குயின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய 'சத்யா' படத்தின் மூலம் பிரபலமானார். கேங்ஸ் ஆப் வாஸிப்பூர், தமிழில் அஞ்சான், சமர் ஆகிய படங்களிலும் நடித்தார்.
தற்போது இவர் 'டெஸ்பாட்ச்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மனோஜ் பாஜ்பாயி இளம் நடிகர்களுடம் பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'வெவ்வேறு நடிகர்களை, குறிப்பாக இளம் புது நடிகர்களை நாம் முழு மனதுடன் வரவேற்க வேண்டும். அவர்கள் படத்திற்கு புதிய ஆற்றலையும் கதைக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கிறார்கள். புதிய நடிகர்களுடம் பணியாற்றுவது நடிப்பை மேலும் ஒரு படி எடுத்து செல்ல உதவும்' என்றார்.
தற்போது இவர் நடித்துள்ள 'டெஸ்பாட்ச்' படத்தில், இளம் நடிகை அர்ச்சிதா நடித்துள்ளார். கானு பெஹ்ல் இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் 13-ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக இருக்கிறது.