< Back
சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துடனான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - தென்னிந்திய நடிகர் சங்கம்
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்கத்துடனான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - தென்னிந்திய நடிகர் சங்கம்

தினத்தந்தி
|
11 Aug 2024 7:27 PM IST

தயாரிப்பாளர் சங்கம் , நடிகர் சங்கம் இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை வாயிலான தீர்வு காணப்படும் என நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்திற்கு இடையே பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இது குறித்து விவாதிப்பதற்காக தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்று கூட்டம் தொடங்கியது.

நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அதன் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்திக், செயற்குழு உறுப்பினர்கள் கோவை சரளா, ராஜேஷ், காளிமுத்து, ஸ்ரீமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்மையில் தயாரிப்பாளர் சங்கம் நடிகர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் தனுஷ், விஷால், சிம்பு உள்ளிட்டோரின் படங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது தொடர்பாகவும், நடிகர்கள் சம்பள பிரச்சினை மற்றும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் தொடங்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் இடையிலான பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் நட்புணர்வுடன் இருப்பதாகவும் பூச்சி முருகன் கூறினார். படப்பிடிப்பு தொடர்பான பிரச்சனைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைக்கு தேதி குறிப்பிடுமாறு தயாரிப்பாளர் சங்கம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட படப்பிடிப்பு தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் வரும் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்