நவம்பர் மாதம் வெளியாகும் நஸ்ரியாவின் புதிய படம்
|நடிகை நஸ்ரியா மற்றும் பசில் ஜோசப் இணைந்து நடித்துள்ள படத்திற்கு 'சூக்ஷம தர்ஷினி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழில் 'ராஜாராணி' படத்தில் நடித்து பிரபலமானவர் நஸ்ரியா. "நய்யாண்டி, நேரம், வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா" ஆகிய படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியா கடைசியாக தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக அண்டே 'சுந்தரனிகி' என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு அவர் நடிக்கவில்லை.
இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். அவரின் வருகைக்கு எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர் பசில் ஜோசப்புடன் இணைந்து புதிய மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்திற்கு "சூக்ஷம தர்ஷினி" என தலைப்பிடப்பட்டுள்ளது. தீபக் பரம்போல், சித்தார்த் பரதன், மெரின் பிலிப், அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ், கோட்டயம் ரமேஷ், கோபன் மங்காட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
எம்.சி.ஜித்தின் இயக்கும் இப்படத்தை சமீர் தாஹிர், ஷைஜு காலித் இணைந்து தயாரிக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் படத்துக்கு இசையமைக்கிறார். 2020-ல் வெளியான 'ட்ரான்ஸ்' என்ற மலையாள படத்தில் நஸ்ரியா நடித்தார். அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்து அவர் நடிப்பில் மலையாள திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படம் வரும் நவம்பர் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.