< Back
சினிமா செய்திகள்
நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அப்டேட்
சினிமா செய்திகள்

நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அப்டேட்

தினத்தந்தி
|
17 Nov 2024 7:43 PM IST

நடிகை நயன்தாரா அடுத்து நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை நாளை காலை வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

சென்னை,

டயானா மரியம் குரியன், சினிமாவுக்காக நயன்தாராவாக மாறி தாய் மொழியான மலையாளத்தில்தான் தனது திரைபயணத்தை தொடங்கினார் . தமிழில் சரத்குமார் ஜோடியாக ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா, இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்தின் ஜோடியாகி சந்திரமுகி படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது புருவத்தை உயர வைத்தார். 2018ம் ஆண்டில் போர்ஸ் இதழில் இடம்பிடித்த டாப் 100 லிஸ்டில் இடம்பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை என்ற பெருமையும் பெற்றார் . இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இவர் நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுமில்லாமல் சர்ச்சையிலும் சிக்கியது. தற்போது, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக், தனி ஒருவன் 2, குட் பேட் அக்லி, மூக்குத்தி அம்மன் 2, மகாராணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்த ஜவான் படத்தில் நடித்து இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது. 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியானது. அதில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. இதனால் அந்த வீடியோவுக்கு எதிராக நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இருக்கிறார். இதனையடுத்து, தன்மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் நடிகர் தனுஷ் பழிவாங்குகிறார் என்று நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இது தொடர்பாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கையையும் வெளியிட்டார்.

இந்நிலையில் நயன்தாரா அடுத்து நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. போஸ்டரில் நயன்தாரா கையில் உலக்கை வைத்து இருக்க அவருக்கு முன் பெரிய பெரிய ரவுடிகள் இருப்பது போல காட்சிகள் அமைந்துள்ளது.

இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் மற்றும் மூவிவெர்ஸ் இந்தியா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் இதற்குமுன் இமைக்கா நொடிகள், யானை, திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்