நயன்தாராவின் ஆவணப்படம் : ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு சந்திரமுகி படக்குழு நோட்டீஸ்
|ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கோரி நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது டாக்ஸிக், டியர் ஸ்டுடென்ட்ஸ் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த நவம்பர் மாதம் 18-ந் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' ஆவணப்படம் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் அவருடைய திருமண வீடியோ மற்றும் சிறுவயது வாழ்க்கை முதல், முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. மேலும் நயன்தாராவின் பேட்டியும், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள், மேக்கப் போடுவது, விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் உள்ளிட்ட பல விசயங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆவணப்படத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த காட்சியை உரிய அனுமதியின்றி அதில் பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். மேலும் தனுஷ் இது தொடர்பாக நீதிமன்றத்தில் நயன்தாராவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்அதே ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக, நடிகை நயன்தாராவிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என சந்திரமுகி படக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.