நாக சைதன்யா - சோபிதா ஆடம்பரமான திருமணத்தை விரும்பவில்லை - நடிகர் நாகார்ஜுனா
|நாக சைதன்யா - சோபிதா ஜோடி திருமணம் டிசம்பர் 4ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தெலுங்கில் 'ஏ மாயா சேசாவே, மனம், லவ் ஸ்டோரி, மஜிலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு பிரிவதாக அறிவித்து விவாகரத்து பெற்றுகொண்டனர்.
அதன் பிறகு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக தகவல் பரவியநிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது குறித்தான புகைப்படங்களை நடிகர் நாகார்ஜுனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
நடிகர் நாகார்ஜுனா, விரைவில் நடைபெற உள்ள தனது மகன் நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணத்திற்காக கார்த்துக்கொண்டிருக்கிறார். மேலும் இந்த திருமணம் குறித்து இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், திருமணத்திற்கான திட்டம் குறித்து பகிர்ந்து கொண்டார். நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் ஆடம்பரமான இந்திய திருமணத்தை விரும்பவில்லை என்றும், அனைத்தும் அவர்களின் விருப்பப்படியே திட்டமிடப்பட்டு வருவதாக நாகர்ஜுனா கூறியுள்ளார்.
"சைதன்யாவும் பிரமாண்ட திருமணத்தை விரும்பவில்லை. அவரும் சோபிதாவும் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்வதை விரும்புகின்றனர். எனவே இதற்கான ஏற்பாடுகளை அவர்களிடமே விட்டுவிடுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர். அவர்கள் அதை தங்கள் வழியில் செய்ய விரும்பினர். உண்மையாகவே இந்த வார்த்தை எனக்கு நிம்மதியை கொடுத்தது. தயவுசெய்து செய்யுங்கள் என்று கூறிவிட்டேன். சோபிதாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு கொடுக்கும் ஒத்துழைப்பு பற்றி கூறிய நாகர்ஜுனா, என் மகன் திருமணத்தில், பாரம்பரிய திருமண சடங்குகள் மற்றும் புனித மந்திரங்களின் இடம்பெற வேண்டும் என்பதை நான் விரும்பினேன். சோபிதாவின் பெற்றோரும், இது போன்ற முறைகளை சேர்க்க விரும்புவதில் தெளிவாக இருந்தனர். என்னை பொறுத்தவரையில், மந்திரங்களும் சடங்குகளும் மிகவும் இனிமையானவை - அவை அமைதியைத் தருகின்றன. இது ஒரு அழகான திருமணமாக இருக்கும், எளிமையானதாகவும், மனதிற்கு இதமானதாகவும் இருக்கும், இந்த ஜோடியைப் போலவே" என நாகர்ஜுனா கூறியுள்ளார்.
இந்த ஜோடி டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் நிலையில், குடும்பத்தினருக்கு நெருங்கிய பிரபலங்கள் மட்டுமே அழைக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் பரிசுகளுடன் கூடிய இவர்களின் திருமண பத்திரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.'மங்கி மேன்' என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.