சிறையிலிருந்து திரும்பிய அல்லு அர்ஜுனை சந்தித்து ஆதரவு தெரிவித்த சக நடிகர்கள்!
|சிறையிலிருந்து திரும்பிய அல்லு அர்ஜுனை நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா மற்றும் ராணா டகுபதி ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தனர்.
ஐதராபாத்,
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5-ந் தேதி 'புஷ்பா 2' திரைப்படம் வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ந் தேதி இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. அதனை காண அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா திரையரங்கிற்கு சென்றனர்.அப்போது நடிகர் அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் திரையரங்கில் கூடினர். இதனால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்திருந்த ரேவதி (வயது 35) என்ற பெண்ணும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் (வயது 9) கூட்ட நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது ரசிகர்கள் பலரும் இருவர் மீதும் ஏறி மிதித்தனர். இதனால் இருவரும் மூச்சுபேச்சின்றி சுயநினைவை இழந்தனர்.இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் அல்லு அர்ஜுன் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். சிக்கட்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அல்லு அர்ஜுன் பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர், அவர் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நேற்றிரவே ஐதராபாத் கோர்ட்டு உத்தரவிட்டது. ஐதராபாத் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து, இன்று காலை அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்
இந்த நிலையில் அவர் இன்று காலை சிறையில் இருந்து வீட்டிற்கு வந்த போது, மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற விஜய் தேவரகொண்டா அல்லு அஅர்ஜுனை கட்டித்தழுவி ஆதரவு தெரிவித்தார். நடிகர்கள் நாக சைதன்யா, ராணா டகுபதி ஆகியோர் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தனர்.