திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை விற்றதாக பரவிய தகவல் - நாக சைதன்யா மறுப்பு
|நாக சைதன்யா - சோபிதா திருமண ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.
ஐதராபாத்,
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
அதன் பிறகு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக தகவல் பரவியநிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது குறித்தான புகைப்படங்களை நடிகர் நாகார்ஜுனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இவர்களது திருமணம் அடுத்த மாதம் 4ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படும்நிலையில், திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இந்தத் திருமண நிகழ்வை ஆவணப்பட பாணியில் காட்சிப்படுத்தும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 50 கோடிக்கு பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நாக சைதன்யா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'அது தவறான செய்தி, அப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை' என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.