'அவருடன் அல்லது அவரது இயக்கத்தில் நடிப்பதுதான் எனது கனவு' - 'மீசைய முறுக்கு' நடிகர் ஆனந்த்
|'மீசைய முறுக்கு' படத்தில் தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆனந்த்
சென்னை,
ஹிப்ஹாப் ஆதி இயக்கிய 'மீசைய முறுக்கு' படத்தில் தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆனந்த். இவர் தற்போது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மேலும் பவானி ஸ்ரீ, மோனிகா, இர்பான் மற்றும் ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜி.வி பிரகாஷ்குமார் இணைந்து பாடினர்.இளைய தலைமுறையினரின் நட்பு பற்றிய கருத்தை மையமாக கொண்டு உருவான இப்படம் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்தநிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு ஆனந்த் பேசுகையில், 'எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் தனுஷ் சார். அவரால்தான் நான் சினிமாவில் நுழைந்தேன். அவருடன் நடிப்பது அல்லது அவரது இயக்கத்தில் நடிப்பதுதான் எனது கனவு.
'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தில் 'அழாதே' பாடல் பாடுவதற்காக அவர் ஸ்டுடியோவிற்கு வந்தபோதுதான் நான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அவர் என்னை 'இயக்குனர் சார்' என்று அழைத்ததை என்னால் நம்பவே முடியவில்லை. அவரது 'ராயன்' படம் வெளியாகி ஒரு வாரத்திற்குப் பிறகு 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' வெளியானது. இரு படங்களின் பேனர்களையும் அடுத்தடுத்து பார்த்தபோது, இந்த பிரபஞ்சமே என் பேச்சைக் கேட்டதுபோல் உணர்ந்தேன்' என்றார்.