சத்யராஜின் 3-வது இந்தி படம் - ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்த 'முஞ்யா'
|ஹாரர் காமெடி படமாக உருவான "முஞ்யா" வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மும்பை,
பிரபல பாலிவுட் இயக்குனர் ஆதித்யா சர்போதார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தி படம் "முஞ்யா". இதில், ஷர்வரி வாக், அபய் வர்மா, மோனா சிங் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஹாரர் காமெடி படமாக உருவான "முஞ்யா" வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இப்படம் வெளியாகி 3 வாரங்களை கடந்துள்ளநிலையில், ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "முஞ்யா' அனைவரின் இதயங்களிலும் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளது," என்று பதிவிட்டு படம் வெளியான 18 நாட்களில் ரூ.105.95 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சத்யராஜ் முன்னதாக இந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ராதேஷ்யாம் படங்களில் நடித்திருந்தார். தற்போது நடித்துள்ள "முஞ்யா" இவருக்கு 3-வது இந்தி படமாகும்.