< Back
சினிமா செய்திகள்
எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு - கமல்ஹாசன் இரங்கல்
சினிமா செய்திகள்

எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு - கமல்ஹாசன் இரங்கல்

தினத்தந்தி
|
26 Dec 2024 8:53 AM IST

பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் (91) இதய செயலிழப்பு காரணமாக கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் பத்ம பூஷண் விருது பெற்றவர். சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம். மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.

மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான 'கன்யாகுமரி' படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான 'மனோரதங்கள்' வரை அந்த நட்பு தொடர்ந்தது.

மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.

எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது. இது பேரிழப்பு. தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது. மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இருதயப்பூர்வமான அஞ்சலி" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்