< Back
சினிமா செய்திகள்
Movie Riview: Naanum Oru Azhagi|
சினிமா செய்திகள்

சினிமா விமர்சனம்: 'நானும் ஒரு அழகி'

தினத்தந்தி
|
6 July 2024 7:15 AM IST

குழந்தையின்மை பிரச்சினைக்கு செல்போன், லேப்டாப் போன்றவை காரணமாக இருப்பதை இப்படம் காட்டுகிறது.

சென்னை,

தனது தாய்மாமனை மணக்க விரும்பும் மேக்னா, விதியின் காரணமாக நாட்டாமை மகனுக்கு மனைவியாகிறார். பின்னர் கணவனுடன் பட்டினத்தில் குடியேறும் மேக்னாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் ஏளனம் செய்கின்றனர். கணவனும் துன்புறுத்துகிறான்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறி சொந்த கிராமத்துக்கு வருகிறார். அங்கு தாய்மாமனுடன் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டு கர்ப்பமாகிறார். அதன்பிறகு வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் என்ன என்பது கதை.

கதையின் நாயகியாக வரும் மேக்னாவுக்கு முழு கதையையும் சுமக்கும் கனமான கதாபாத்திரம். அதற்கு தனது யதார்த்தமான இயல்பான நடிப்பால் உயிரூட்டி உள்ளார். தாய்மாமனிடம் செய்யும் குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கிறது.

தாய்மாமனாக வரும் அருண் அமைதியான நடிப்பால் கவர்கிறார். காதலை சொல்ல முடியாமல் தவிப்பது. காதலி இன்னொருவனுக்கு மனைவியானதும் உடைவது. அதே காதலி மீண்டும் தன்னிடம் வந்ததும் உற்சாகமாவது என்று கதாபாத்திரத்தை ரசித்து செய்துள்ளார்.

மேக்னா கணவனாக வரும் ராஜதுரை வில்லத்தனம் காட்டி உள்ளார். நெல்லையின் வளமான பகுதிகளை மகிபாலனின் கேமரா கண்முன் நிறுத்துகிறது. காட்சிகளின் நீளம் பலகீனம். கிளைமாக்ஸையும் மாற்றி யோசித்து இருக்கலாம்

குழந்தையின்மை பிரச்சினையையும் அந்த பாதிப்புக்கு செல்போன், லேப்டாப் போன்றவை காரணமாக இருப்பதையும் சமூக அக்கறையோடு சொல்லி கவனம் பெறுகிறார் இயக்குனர் பொழிக்கரையான்.

மேலும் செய்திகள்