< Back
சினிமா செய்திகள்
தாய் சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பு: ஏ.ஆர்.ரகுமான் மகன் வெளியிட்ட பதிவு

கோப்புப்படம்

சினிமா செய்திகள்

தாய் சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பு: ஏ.ஆர்.ரகுமான் மகன் வெளியிட்ட பதிவு

தினத்தந்தி
|
20 Nov 2024 6:44 AM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிந்து விட்டதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

சென்னை,

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று (நவ. 19) இரவு அறிவித்தார். இந்த நிலையில், சில மணிநேரத்திலேயே ஏ.ஆர். ரகுமானும் அதனை உறுதி செய்தார்.

இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார். ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

சினிமா தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு வலம் வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் காதலை பகிர்ந்து வந்தனர். இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தார்.

இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், தனது எக்ஸ் வலைதளபக்கத்தில், "நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி" என்று பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து அவர்களது மகன் ஏ.ஆர். அமீன், தனது இன்ஸ்டா வலைதள பக்கத்தில் "இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு இடையேயான 29 ஆண்டு கால திருமண வாழ்வு முறிந்துள்ளது. இந்த அறிவிப்பு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



மேலும் செய்திகள்