காப்புரிமை சிக்கலில் மோகன்லாலின் 'பரோஸ்' திரைப்படம்
|ஜெர்மனியில் வசிக்கும் மலையாள எழுத்தாளர் 'பரோஸ்' படத்தின் கதை தனது நாவலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை,
பிரபல நடிகர் மோகன்லால். இவர் தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.
குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.
வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்கிறார்கள். இந்நிலையில், இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியில் வசிக்கும் மலையாள எழுத்தாளர் ஜார்ஜ் துண்டி பரம்பில் என்பவர், இந்தப்படத்தின் கதை தனது 'மாயா'நாவலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி மோகன்லால், தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், டி.கே. ராஜீவ்குமார், ஜிஜோ புன்னூஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காப்புரிமை பிரச்சினை தீரும்வரை படத்தை வெளியிடக் கூடாது என்றும் அந்த நோட்டீஸில் அவர் தெரிவித்துள்ளார்.