< Back
சினிமா செய்திகள்
மோகன்லால்  நடித்த எம்புரான் படப்பிடிப்பு நிறைவு!
சினிமா செய்திகள்

மோகன்லால் நடித்த எம்புரான் படப்பிடிப்பு நிறைவு!

தினத்தந்தி
|
1 Dec 2024 2:37 PM IST

எம்புரான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை இயக்குனர் பிருத்விராஜ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, மொராக்கோ, அரபு நாடுகள் என வெளிநாடுகளிலும் இந்தியாவில் டில்லி, ஷிம்லா, மும்பை, குஜராத், கேரளா, சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் நடைபெற்று நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதை இயக்குனர் பிருத்விராஜ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கடைசி நாள் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள மலம்புழா அணையில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்தது குறித்து மோகன்லால், "எல் 2- எம்புரான் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகள் என 4 வெளிநாடுகள், 8 மாநிலங்கள் என 14 மாதப் பயணம் நம்ப முடியாத ஒன்றாக அமைந்தது. இந்தப் படம் பிருத்விராஜின் அற்புதமான மாயாஜால இயக்கத்திற்கு சொந்தமானது. இந்தப் படத்தின் மையக்கருவாக அமைந்திருக்கும் கதை சொல்லலுக்கு முரளி கோபிக்கு நன்றி. இப்படத்திற்கான அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் விலைமதிப்பற்ற ஆதரவளித்த லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அவர்களுக்கும் நன்றி.

இந்தக் கதையை உயிர்ப்பிக்கும் அர்ப்பணிப்புள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை. எல் 2 - எம்புரான், ஒரு கலைஞனாக என் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயம். நான் எப்போதும் பொக்கிஷமாகப் போற்றுவேன். எங்கள் அற்புதமான பார்வையாளர்களுக்கு உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. காத்திருங்கள், இன்னும் நிறைய இருக்கிறது," என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்