மோகன்லால் என்னை காப்பாற்ற முயற்சிப்பார் ஆனால்...தூக்கத்தைக் கெடுக்கும் கனவை பற்றி பகிர்ந்த நடிகை
|அடிக்கடி வந்து தூக்கத்தைக் கெடுக்கும் கனவை பற்றி நடிகை நவ்யா நாயர் பகிர்ந்துள்ளார்.
திருவனந்தபுரம்,
தமிழில் 'அழகிய தீயே' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நவ்யா நாயர். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ஆடும் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
2010-ல் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், பரத நாட்டியம் கற்று தேர்ந்த நவ்யா நாயர் நடன ஆசிரியராக மாறி மாணவ, மாணவிகளுக்கு நடனம் கற்று கொடுக்க நடன பள்ளியையும் ஆரம்பித்து இருக்கிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நவ்யா நாயர், அடிக்கடி வந்து தூக்கத்தைக் கெடுக்கும் கனவை பற்றி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'பயங்கரமான கனவு ஒன்று எனக்கு அடிக்கடி வரும். அதனால், நான் நள்ளிரவு அல்லது அதிகாலை 2 மணிக்கு பயத்தில் எழுந்துவிடுவேன். அதன்பின் முகத்தை கழுவிவிட்டு வந்து மீண்டும் தூங்க முயற்ச்சிப்பேன். ஆனால், அதன்பின்னும் அந்த பயம் என்னுள் இருந்துகொண்டே இருக்கும். இதனால், என்னால் மீண்டும் தூங்க முடியாது.
நேரத்தை கடத்துவதற்காக எனது செல்போனில் வீடியோக்களைப் பார்ப்பேன். பின்னர், சூரிய வெளிச்சம் வரும்போதுதான் நிம்மதியாக தூங்குவேன்' என்றார்.
தொடர்ந்து அந்த கனவை பற்றி அவர் கூறுகையில், 'அந்த கனவில் என்னைச் சுற்றி பாறைகள் மற்றும் மணல் மட்டுமே இருக்கும். என்னுடன், மோகன்லால், பிருத்விராஜ் ஆகியோரும் அந்த இடத்தில் மாட்டிக்கொண்டனர்.
அங்கு ஒரு விசித்திரமான உயிரினமும் இருக்கும். அந்த உயிரினம் கருமையான கண்களுடனும் உடல் முழுவதும் குமிழிகளையும் கொண்டிருந்தது. அது என்னை துரத்தும், மோகன்லால், பிருத்விராஜ் அந்த உயிரினத்திடமிருந்து என்னைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள், ஆனால் அதன்பின் நான் எழுந்து விடுவேன். இது இப்போது வேடிக்கையாகத் தோன்றினாலும், கனவு மிகவும் பயங்கரமாக இருந்தது' என்றார்.